மணிரத்னம் படத்தில் நடிக்கணும்… இது தீபிகா படுகோன் ஆசை
Wednesday 08.10.2014
மும்பை: பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அவரது முதல் படமே தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டதால் அப்போதே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தமிழ் பேசும் பெண்ணாக நடித்திருந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையானில் நடித்திருந்த தீபிகா, நேரடி தமிழ்ப்பட வாய்ப்புக்கு காத்திருக்கிறாராம். இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
நல்ல கதாபாத்திரம்…நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்க தயராக இருக்கிறேன். ஆனால், இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு வரவில்லை என்பது தான் உண்மை.
கதை முக்கியம்… நான் யாரோடு நடிக்கிறேன் என்பதை விட, படத்தின் கதை எப்படிப் பட்டது என்பது தான் முக்கியம். அந்தக் கதையில் எனது பாத்திரம் எப்படி அமைந்திருக்கிறது என்று பார்ப்பேன்.
கதை தான் ஹீரோ… அதற்குப் பிறகு படத்தின் இயக்குநர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பேன். அவ்வளவு தான். மற்றபடி குறிப்பிட்ட நடிகர்களோடு தான் நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரை கதை தான் ஹீரோ.
மணிரத்னம் படம்… எனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க ரொம்ப ஆசை. ஒருமுறை மணிரத்னம் இயக்கத்தில் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அச்சமயத்தில் முடியாமல் போய் விட்டது. மீண்டும் வாய்ப்பு வருமா என்று காத்திருக்கிறேன்’ என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.