தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கிறேனா..?- கமல ஹாசன் விளக்கம்
Monday 07 Jul 2014
ஹைதராபாத்: தெலுங்கு திரைப்படத்தில் தான் நடிக்க உள்ளதாக வெளியான தகவலை தெளிவுபடுத்தியுள்ளார் உலக நாயகன் கமலஹாசன். தர்மா தேஜா இயக்கத்தில் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமலஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் இதை, கமலஹாசன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தெலுங்கு திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை கிடையாது. தெலுங்கு இயக்குநர்களுடன் நான் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளேன்.
அதே நேரம் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்க நான் ஒப்பந்தம் செய்யவில்லை. தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க நான் முடிவெடுத்தால், அதை எனது சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல், தயாரிக்கும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலஹாசன் தற்போது, உத்தம வில்லன் திரைப்பட பணிகளில் மும்முரமாக உள்ளார். இதையடுத்து மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான திருஷ்யத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.