‘திகார்’ ஆடியோ விழாவில் கிரண்பேடி, வ.உ.சி. பேரன்
Thursday 27.11.2014
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு இயக்கியுள்ள ‘திகார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகன் பார்த்திபன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
திகார் படத்தின் பாடல் சிடியை திகார் ஜெயில் புகழ் கிரண்பேடி ஐ.பி.எஸ் வெளியிட அதை வ.உ.சி பேரன் சி.வ.சிதம்பரம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
வழக்கமாக தனது படங்களில் அம்மா, தங்கை செண்டிமெண்ட் இருக்கும் என்றும், ஆனால் இந்த படத்தில் முதன்முதலாக அப்பா-மகன் செண்டிமெண்ட் உள்ளது என்றும் இயக்குனர் பேரரசு கூறியுள்ளார். இந்த படத்தில் எட்டு அதிரடி சண்டைக்காட்சிகள் இருப்பதாவும், படத்தில் ஜியாத்கான் என்ற வில்லனை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பேரரசு கூறினார்.
ஷபீர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சேகர்.வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை காயத்ரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரித்துள்ளார். பேரரசு கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு திருத்தணி என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.