சீக்கிரம் திருமணம் செய்து கொள்வேன் – சமந்தா அதிரடி…
Monday, 20 Oct 2014
நடிகை சமந்தா – சித்தார்த் இருவரும் காதலிக்கிறார்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வதந்தி இருந்து வருகிறது. ஆனால், இருவருமே அதை மறுத்து வருகிறார்கள். கடந்த வருடம் கூட இருவரும் ஒன்றாக காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தியதும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது அரிதாக இருந்தது.
இதனிடையே சித்தார்த் நடிக்கும் எனக்குள் ஒருவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தாவும் வந்திருந்தார். அதன் பின் மீண்டும் அவர்களைப் பற்றிய பேச்சுகள் பரவ ஆரம்பித்தன.சமந்தா நடித்துள்ள கத்தி படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் இந்தப் படம் மூலம் தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சமந்தா சீக்கிரமே திருமணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்றுக் கொள்வேன் எனக் கூறி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். “இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன். அதன் பின் சீக்கிரமாகவே குழந்தையும் பெற்றுக் கொள்வேன். அதிகபட்சமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் குழந்தை பெற விரும்புகிறேன். எனக்கு 60 வயது ஆகும் போது என்னுடைய குழந்தைக்கு 15 வயது ஆக இருப்பதை நான் விரும்பவில்லை. சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டுவிடுவேன், ” என்றும் சொல்லியிருக்கிறார்.
வாழ்க்கையின் அர்த்தத்தை சமந்தா நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.