கவுண்டமணி நடிக்கும் 49 ஓ… நாளை மறுநாள் ட்ரைலர் வெளியீடு!
Thursday, September 11, 2014
கவுண்டமணி நாயகனாக நடிக்கும் 49 ஓ படத்தின் முன்னோட்ட வெளியீடு வரும் செப்டம்பர் 12-ம் தேதி நடக்கிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் சிகரம் தொட்ட நடிகர் கவுண்டமணி. இன்றும் அவர் நகைச்சுவைக்கு தனி மவுசு உள்ளது. வயது வித்தியாசமில்லாமல் ரசிக்கும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக எந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்து வந்த கவுண்டமணி, இப்போது வாய்மை மற்றும் 49 ஓ படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதில் 49 ஓ படத்தை கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஆரோக்கியதாஸ் இயக்கியுள்ளார். அரசியல் அமைப்புப் பிரிவில் வாக்களிக்க விரும்பாதவர்கள் பயன்படுத்தும் 49-ஓ என்ற உரிமை குறித்த கதை என்றாலும் முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயியாக வந்து விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதாகக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகிறது.