கமல் இடத்தில் இப்பொழுது விஜய்
Tuesday 28 OCT 2014
உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற ‘கத்தி’ திரைப்படத்த்தை அடுத்து விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்காக சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலை அருகே உத்தண்டி என்ற இடத்தில் பிரமாண்டமான செட் ஒன்று தயாராகி வருகிறது. ஆதித்ராம் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் முழு பொறுப்பில் உருவாகி வரும் இந்த பிரமாண்டமான செட்டில்தான் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதே இடத்தில்தான் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் கோவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய சரித்திர பின்னணி கொண்ட படங்களை இயக்கிய சிம்புதேவன், இந்த படத்திலும் அதே சரித்திர பின்னணி கொண்ட திரைக்கதையை தேர்வு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘சதுரங்க வேட்டை’ நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார். இந்த திரைப்படம் ‘கத்தி’யின் வசூல் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்