‘கத்தி’யை பார்க்க கொடுத்து வைக்காத தமிழக ரசிகர்கள்
Wednesday 15 Oct 2014
ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் தற்போது IMAX என்ற புதிய டெக்னாலஜியில் வெளியாகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படத்தை திரையில் பார்த்தால் படம் மிக தெளிவாகவும், முப்பரிமாண வடிவத்திலும், ஹை ரெஸலூசனிலும் தெரியும். இந்த தொழில்நுட்ப வசதிகள் உள்ள தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்பது நமது துரதிஷ்டம். ஆனால் மும்பை, பெங்களூர் ,ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் IMAX தொழில்நுட்ப வசதியுடன் உள்ள தியேட்டர்கள் இருக்கின்றது.
தற்போது செய்தி என்னவெனில் விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியாகும் ‘கத்தி’ திரைப்படத்தின் ஒருசில பிரிண்ட்டுக்கள் IMAX தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் தற்போது நெதர்லாந்து போன்ற ஒருசில நாடுகளில் மட்டுமே கத்தி திரைப்படம் திரையிடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் எந்த ஒரு தியேட்டரிலும் IMAX தொழில்நுட்பத்தில் கத்தி வெளியாகவில்லை.
நெதர்லாந்து தவிர மேலும் பல நாடுகளில் IMAX தொழில்நுட்பத்தில் கத்தியை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் தற்போது பேசி வருவதாகவும், பல நாடுகளில் இந்த தொழில்நுட்ப வசதியுள்ள தியேட்டர்களில் கத்தியை திரையிட தியேட்டர் அதிபர்கள் முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது தமிழக மக்களின் துரதிஷ்டம், நமக்கு இளைய தளபதியின் படத்தை IMAX தொழில்நுட்பத்தில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை.