‘கத்தி’யால் பாதிக்கப்பட்டதா ‘லிங்கா’?
விஜய், சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படத்தின் கதையும், ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘லிங்கா’ படத்தின் கதைக்கருவும் ஒரே மாதிரியாக இருப்பதால், லிங்கா படத்தின் ஒருசில காட்சிகளை மீண்டும் மாற்றுவதற்காக ரீஷூட் செய்யப்படவுள்ளதாக இணையதளங்களில் பரவி வரும் தகவல்களை லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உறுதியாக மறுத்துள்ளார்.
பல்நாட்டு நிறுவனம் ஒன்று தண்ணீருக்காக கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களை மோசடி செய்து கைப்பற்றுவதுதான் கத்தியின் மையக்கரு. இதே கதைதான் லிங்காவிலும் இருப்பதாகவும், எனவே ‘லிங்கா’ படத்தின் ஒருசில காட்சிகளை கே.எஸ்.ரவிகுமார் மாற்றுவதற்காக மீண்டும் படப்பிடிப்பு நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டு படங்களின் கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லை என்றும், லிங்கா படத்தின் கதை, கத்தியின் கதையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதால் ரீஷூட் செய்யவேண்டிய அவசியமே எழவில்லை என்றும், ராக்லைன் வெங்கடேஷ் உறுதியாக கூறியுள்ளார்.
‘லிங்கா’ படப்பிடிப்பு பூசணிக்காய் உடைத்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த படத்தின் பின்னணி இசைகோர்ப்பு பணிகள் நடந்து வருவதாகவும் படத்தினை கண்டிப்பாக டிசம்பர் 12ல் ரிலீஸ் செய்வோம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.