‘ஐ’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு? ஷங்கர் விளக்கம்
Tuesday 14 Oct 2014
விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஐ’ படத்தின் பட்ஜெட் குறித்து ஷங்கர் தற்போது மனம்திறந்து பேசியுள்ளார். சில ஊடகங்களில் ‘ஐ’ படத்தின் பட்ஜெட் குறித்து தவறான தகவல்கள் வெளிவந்துள்ளது என்றும், ரூ.180 கோடிக்கும் மேலாக இந்த படத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்று ஷங்கர் கூறியுள்ளார். உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடிக்கும் குறைவுதான் என்று கூறியுள்ள ஷங்கர் படத்திற்காக வாங்கப்பட்ட பெரும்பாலான உபகரணங்கள் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதால், படத்தின் பட்ஜெட் பெருமளவு குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் செய்தியை உறுதி செய்துவிட்டு வெளியிடுமாறு அவர் ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்வதாக கூறினார். மேலும் ‘ஐ’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த பணிகளை முடித்துவிட்டு ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாகவும் ஷங்கர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக ‘ஐ’ படத்தின் பட்ஜெட் குறித்து பல்வேறு ஊடகங்கள் பல்வேறு வகையான செய்திகள் வெளியிட்டு வந்தன. பல ஊடகங்களில் ரூ.150 கோடிக்கு மேல்தான் ‘ஐ’ படத்தின் பட்ஜெட் இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் ஷங்கரின் விளக்கம், படத்தின் உண்மையான பட்ஜெட் குறித்த ஐயங்களை நீக்கியுள்ளது.