இரட்டை வேடத்தில் கமல்
Monday 17 Mar 2014
நடிகர் கமலஹாசன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் உத்தம வில்லன் படத்தில் அவருக்கு இரட்டை வேடம். இன்று வெளியாகியுள்ள படக்குழுவினரின் ஊடக அறிக்கையில் உத்தம வில்லன் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் கதை திரைக்கதையை எழுதியுள்ள கமல் இரண்டு மைய பாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒருவர் 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கூத்து கலைஞர் உத்தமன். இரண்டாமவர் 21ஆம் நூற்றாண்டில் வாழும் திரையுலக சூப்பர்ஸ்டார் மனோரஞ்சன். உத்தமனாகவும் மனோரஞ்சனாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் உலகநாயகன்.
கமலின் நிஜ வாழ்க்கையில் அவரை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியிருக்கும் அவரது குருநாதரும் மூத்த இயக்குநருமான கே.பாலச்சந்தர், மனோரஞ்சனின் திறமையை அடையாளம் கண்டு அவரின் அந்தஸ்தை உயர்த்தும் இயக்குநராக நடிக்கிறார்.
மனோரஞ்சனின் மனைவியாக நடிகை ஊர்வசியும் மாமனாராக மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள். ஆண்ட்ரியா மனோரஞ்சனின் ரகசிய காதலியாக நடிக்கிறார்.
8ஆம் நூற்றாண்டில் வாழும் உத்தமனின் மனநலம் பாதிப்படைந்த மகளாக விஸ்வரூபம் பட நாயகி பூஜா குமார் நடிக்கிறார். கொடுங்கோல் சர்வாதிகாரியான முத்தரசன் என்ற பாத்திரத்தில் நாசர் நடிக்கிறார்.
ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும் அவரது வளர்ப்பு மகளாக பூ மற்றும் மரியான பட நாயகி பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். இவ்விரு பாத்திரங்கள் படத்தில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துபவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தசாவதாரத்தில் ஃப்ளெச்சர் கமலுடன் சேர்ந்து நம்மை வயிறு புண்ணாகும் அளவு சிரிக்க வைத்த எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய பாத்திரத்தில் நடிக்கிறார்.படத்தை இயக்குபவர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பது ஜிப்ரான் என்று அனைவருக்கும் தெரியும். கமலஹாசனும் விவேகாவும் பாடல்களை எழுதப் போகிறார்கள். ஒளிப்பதிவை ஷாம் தத்தும் படத்தொகுப்பை விஜய் சங்கரும் கவனிக்கிறார்கள். மதுசூதனன் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் என். லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் தன் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். ஜி.ஆர்.வெங்கடேஷ் என்பவர் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.