இசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை
Wednesday 12 Nov 2014
பிரபல தமிழ் எழுத்தாளரும், கமல் நடித்த ‘பாபநாசம்’ படத்தின் வசனகர்த்தாவுமான ஜெயமோகன் எழுதிய மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசு என்ற நாவலின் நான்கு பாகங்களை வெளியிடும் விழா ஒன்று சென்னையில் உள்ள எழும்பூர் மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெண்முரசு நாவலின் முதல் பாகத்தை கமல்ஹாசனும், இரண்டாவது பாகத்தை இளையராஜாவும் வெளியிட்டனர். இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நாம் எல்லோருமே கதை கேட்டு வளர்ந்தவர்கள்தான். நமக்கு மதம் தேவையாக இருக்கலாம், அல்லது தேவையில்லாமலும் இருக்கலாம். ஆனால் மதங்களில் இருக்கும் கதைகள் கண்டிப்பாக தேவை. மகாபாரத்ததை நாவலாக ஜெயமோகன் எழுதியது போல அதை இசை வடிவத்தில் இளையராஜா இசையமைக்க வேண்டும் என்பது எனது ஆசை’ என்றார்.
இதற்கு பதிலளித்து இளையராஜா பேசியதாவது: ‘கமல்ஹாசன் கூறியபடி மகாபாரத்தை இசை வடிவில் அமைப்பது என்பது எளிதான பணியல்ல. அதற்கு மாபெரும் உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த பணியை செய்ய வேண்டும் என்ற ஆவல் தற்போது எனக்குள் எழுந்துள்ளது என்றார்.
இந்த விழாவில் பிரபல எழுத்தாளர்கள் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், பிரபஞ்சன் ஆகியோர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.