அனிருத்தை சந்தோசப்படுத்திய விஜய் ரசிகர்கள்!
Friday 19 Sep 2014
இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படங்களின் டீசர், ஆடியோவை இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அதன்பிறகு அவற்றை எவ்வளவு ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடுகிறார்கள். அதையடுத்து, முந்தைய படங்களில் இருந்து எத்தனை நாளில் எவ்வளவு ரசிகர்கள் பார்த்துள்ளார்கள் என்பதுடன் ஒப்பிட்டு இந்த படம் எத்தனையாவது இடத்தை பிடித்திருக்கிறது என்பதை கணக்கிடுகிறார்கள்.
அந்த வகையில், இந்த தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ஐ, கத்தி படங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் ஐ படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த 15-ந்தேதி நடைபெற்றது. அதையடுத்து இதுவரை வெளியான படங்களை முறியடித்து விட்டு முதலிடத்தில் ஐ படம் இருப்பதாக நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்தார்கள.
ஆனால். இன்றைக்கு நிலைமையே வேறு நேற்று விஜய்யின் கத்தி படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. அதோடு, விஜய் ரசிகர்களும் இணையதளங்களில் கத்தி பாடல்களை போட்டி போட்டு, அதாவது ஐ படத்தை விட ஒரே நாளில் அதிகம்பேர் டவுன்லோடு செய்து விட்டனர். இதனால் ஒரே நாளில் ஐ படத்தை முறியடித்து முதலிடத்துக்கு வந்து விட்டது கத்தி.
இதனால் அதிக உற்சாகத்தில் இருப்பவர் அனிருத்தான். அவர் இசையமைத்து வெளியான 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, மான்கராத்தே, கத்தி என அனைத்து படங்களுமே தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வருவதால், கடும் உற்சாகத்தில் இருக்கிறார் அனிருத். குறிப்பாக, ஏஆர்.ரகுமான் இசையமைத்த ஐ படத்தை விட கத்தி பாடல்களை அதிக ரசிகர்கள் டவுன் லோடு செய்திருப்பது விஜய் படம் என்பதினால்தான் சாத்தியமாகியிருக்கிறது என்றும் கூறியுள்ளார் அனிருத்.